அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து சசிகலாவை வரவேற்று சுவரொட்டி விளம்பரங்கள் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், மீண்டும் திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் அதிமுக சார்பில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘தீயசக்தி திமுகவை வீழ்த்த, கழகத்தை வழிநடத்த, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே வருக, வருக’ என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முசிறி அதிமுக செயலாளர் சம்சுதீன் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டி ஒட்டப்பட்ட சில மணி நேரங்களில் திருச்சி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், முசிறி பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள், சுவரொட்டி குறித்த தகவல்களைச் சேகரித்து தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதன் நோக்கம் குறித்து சம்சுதீன் கூறுகையில் “திமுகவை வீழ்த்த அதிமுகவால் மட்டுமே முடியும். அதிமுக என்பது பிரிந்து இருக்கக்கூடிய அதிமுகவும் அமமுகவும். இவை இரண்டும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே திமுகவை வீழ்த்தி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும். எனவே அதிமுகவும் அமமுகவும் இணைந்து ஒரே அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று கூறியுள்ளார்.
அதேபோன்று, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், அதே முசிறி பகுதியில், 18-வது வார்டு செயலாளராக இருக்கும் ராஜ்பாத் என்கிற அதிமுக உறுப்பினர், சசிகலாவை வரவேற்று சுவரொட்டி விளம்பரம் செய்துள்ளார். இந்த இரண்டு சுவரொட்டி விளம்பரங்களும் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினாலோ ஆதரித்து பேசினாலோ அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் ஆங்காங்கே சசிகலா ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெங்கிவரும் வேளையில் சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.