நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கூட்டணி அமைப்பதில் ரகசியப் பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள்.
அதிமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடப்பாடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் இருவர் எடுத்த நிலையில், 90 சதவீதம் சக்சஸ் ஆனது. தொகுதிகளை அடையாளப்படுத்துவதிலும் தேர்தல் செலவுகளுக்கான எதிர்பார்ப்புகளும் இழுபறியை ஏற்படுத்தின.
இந்த நிலையில்தான், பாமக வேண்டாம் என உதறிய திமுக, தற்போது தங்கள் கூட்டணிக்குள் பாமகவை அழைத்து வரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சியை எடுப்பது கனிமொழியா? சபரீசனா? என்கிற பட்டிமன்றத்தை நடத்துகின்றனர் உடன்பிறப்புகள்.
கனிமொழிதான் பாமகவை அழைத்து வரும் முயற்சியில் இருக்கிறார் என செய்திகள் பரவி வரும் நிலையில், கனிமொழி தரப்பில் நாம் விசாரித்த போது , " கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும் என்பதை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார். இது வரை எந்த ஒரு கட்சியையும் திமுக கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பை கனிமொழிக்கு வழங்கப்படவில்லை. அந்த வகையில், பாமகவை அழைக்கும் முயற்சியில் கனிமொழிக்கு தொடர்பில்லை. இது வரை பாமக தரப்பில் யாரிடமும் கனிமொழி பேசவும் இல்லை " என்கிறார்கள் கனிமொழிக்கு நெருக்கமான திமுகவினர்.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கக் கூடாது என்பதில் ராகுல்காந்தி உறுதியாக இருக்கிறார். இதனை உணர்ந்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள், "திமுக கூட்டணியில் பாமக இருந்தால் வட தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியை ஜீரோவாக்கி விடலாம்" என தெரிவித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, தன்னுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் திமுகவின் ஓஎம்ஜி சுனில் மூலமாக, பாமக குறித்து பேசியிருக்கிறார் ராகுல்காந்தி. அந்த வகையில் அவர்கள் எடுக்கும் முயற்சியினால்தான் பாமகவிடம் திமுக பேசியுள்ளது என்கிறார்கள் அறிவாலய தொடர்பாளர்கள்.