தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மநில செயற்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று அவர் சென்னையில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்பு வெளியிட்டார்.
''புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் ஏற்கும் இந்தப் புதிய பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டு பாரதிய ஜனதா கட்சியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்திட பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முழுசக்தியையும் அவர்களுக்கு வழங்கிட எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன். மீண்டும் ஒருமுறை புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தனது ட்வீட்டர் பக்கத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் பா.ஜ.க.-வின் தமிழக முன்னாள் மாநிலத் தலைவராகவும், மத்திய இணையமைச்சராகவும் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் இடம்பெறவில்லை. இதேபோல் எச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெறவில்லை என சிலர் விவாதிக்கின்றனர்.
இதுகுறித்து பாஜக சீனியர்களிடம் விசாரித்தபோது, அகில இந்திய பா.ஜ.க. தலைவராக நட்டா பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடவில்லை. கரோனா தொற்று வந்ததன் காரணமாக இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க காலதாமதமாகிறது. விரைவில் நட்டா பதிய பட்டியலை வெளியிடுவார் என்றும், அதில் தேசிய அளவில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முக்கியப் பதவி கிடைக்கும் என்றனர். இதேபோல் எச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்டோருக்கும் தேசிய அளவில் பொறுப்புகள் கிடைக்கும் என்றனர்.