விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகையச் சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா என்பவர் போட்டியிட உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.