மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி 100 விழுக்காடு இடங்களையும் அனைத்து சமூகத்திற்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை 100 விழுக்காடாக ஆக்க வேண்டும். இப்பொழுது 69 விழுக்காடு இருக்கிறது. 100% ஆக மாற்றி சமுதாயம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கஞ்சா மற்றும் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் 20000 காவலர்களை கூடுதலாக பணியில் அமர்த்தி கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டால்தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை ஏற்படுத்தினால் கடலில் கலக்கும் காவிரி நீரில் 50 டிஎம்சி நீரை சேமிக்கலாம்.
தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் தொழில் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பினை தமிழர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” எனக் கூறினார்.