Published on 31/08/2019 | Edited on 31/08/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக கட்சி இடம் பெற்றது. பாமக கட்சிக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கினர். இதில் பாமக போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற 2016 சட்ட மன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அப்போது நடைபெற்ற தேர்தலில் 5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த நிலையில் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக தொடர்ந்து செயல்பட சட்டமன்றத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் 2 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு தகுதிகளையும் பாமக கடந்த சட்டமன்றத் தேர்தலில் இழந்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பாமக கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அதில் பாமக கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர் தமிழ்நாட்டில் ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ள நிலையில் தற்போது பாமக கட்சிக்கும் மாநில அந்தஸ்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாமகவோடு ராஷ்டிரிய லோக் தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மக்கள் ஜனநாயகக் கூட்டணி, மிசோரம் மக்கள் மாநாடு ஆகியக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போல் மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்ற தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஆகிய கட்சிகளுக்கும் தேசிய கட்சி உரிமையை நீக்கும் நோட்டீஸை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனால் பாமக கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.