கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதில் 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 504 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364, தமிழகத்தில் 834, டெல்லியில் 720, ராஜஸ்தானில் 463, தெலங்கானாவில் 442, கேரளாவில் 357, ஆந்திராவில் 348, கர்நாடகாவில் 181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கரோனா வைரஸ் பரவல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தனியார் மருத்துவமனைகளில் கரோனா சோதனையை இலவசமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. தனியார் மருத்துவமனைகளையும் இணைத்துக் கொண்டு கரோனா சோதனைகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்; கரோனாவை விரட்ட வேண்டும் என்றும், கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் 100-ஆவது நாள் இன்று. 100 நாட்களில் 200 நாடுகள்-பிராந்தியங்களில் பரவியிருக்கிறது கரோனா. 400 கோடி மக்களை முடக்கியிருக்கிறது. மக்களின் மகிழ்ச்சியைப் பதற்றமாக மாற்றியிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்த நிலை மாறி உலகம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்" என்றும், "தயவு செய்து கரோனா வைரசை அரசியலாக்காதீர். கரோனாவை அரசியலாக்குவதைத் தனிமைப்படுத்தி ஒதுக்கி வையுங்கள்" என்றும் கூறியுள்ளார்.