சசிகலா விவகாரத்தில் மன்னார்குடித் தரப்பும் இப்போது இரண்டு பிரிவாகப் பிளவுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, சசிகலாவையும் அவரது சொத்துக்களையும் இளவரசியின் குடும்பம் தான் வருமான வரித்துறையிடம் காட்டிக் கொடுத்தது என்று உறவினர்கள் தரப்பில் இருக்கும் சசியின் ஆதரவாளர்கள் இளவரசி தரப்பை கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு நேரத்தில், செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட, ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து 1674 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை சசிகலா வாங்கினார் என்றும் அதற்கான ஆதரத்தை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்து வருமான வரித்துறை எடுத்தது.

இது தொடர்பாக வாய் திறக்க மறுத்த கிருஷ்ணப்பிரியாவை, சசிகலாவின் வழக்கறிஞரான நாமக்கல் செந்தில், தேசபந்து ஆகியோரின் பதில்களை அவரிடம் எடுத்துக் கூறி, அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டார்கள். எம்.நடராஜன் இறந்தபோது, பரோலில் வந்த சசிகலா, கடந்த 2017 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 7-ந் தேதி வரை தங்கள் வீட்டில் தங்கியிருந்தபோது சொத்து தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை எல்லாவற்றையும் தன் செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்ததை கிருஷ்ணப்ரியா ஒப்புக்கொண்டார். கிருஷ்ணபிரியாவைப் போலவே, அவர் தம்பி விவேக்கிடமிருந்தும் சசிக்கு எதிரான ஒரு கடித ஆதாரத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதோடு, விவேக்கிற்கு சசிகலாவால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில்... அதில் பல்வேறு கம்பெனி டீலிங்குகள் பற்றி அவர் விரிவாக எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வில்லங்கக் கடிதம் பற்றி விவேக்கிடம் அதிகாரிகள் கேட்டபோது, எனக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. எங்கள் வீட்டில் உள்ள இரண்டு செக்யூரிட்டிகளில் யார் இந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தது என்று தெரியவில்லை என்று மழுப்பியிருக்கிறார். இந்த நிலையில்தான் சசிகலாவை இளவரசி குடும்பம் காட்டிக் கொடுத்துவிட்டது என்ற சர்ச்சை மன்னார்குடித் தரப்பையே இரண்டுபடுத்திக்கொண்டு இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.