கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700- லிருந்து 23,077 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 681- லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6,430 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 283 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஊரடங்கை உதாசீனப்படுத்தி ஊர்சுற்றும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஓர் வேண்டுகோள்: உலகையே ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து ஆண்ட இங்கிலாந்தின் இளவரசரும், பிரதமரும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடி உயிர்பிழைத்துள்ளனர். இதை அனைவரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!#COVID19
— Dr S RAMADOSS (@drramadoss) April 23, 2020
இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கரோனா பரவல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஊரடங்கால் மின்வாரிய நிதிநிலைமை மோசமடைந்துள்ளது. மின்னுற்பத்தி நிறுவனங்கள், நிலக்கரிக்கு கொடுக்க நிதியின்றி தமிழகம் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று நிதி மற்றும் கடன் உதவியை வழங்கி மின்வாரியத்தை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்றும், இந்தியப் பெருநகரங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மும்பை- 4205, தில்லி- 2248, சென்னை- 400. மும்பை, தில்லியுடன் ஒப்பிடும் போது சென்னை நிலைமை பரவாயில்லை. நோய்த் தடுப்பில் அரசுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்போம்; சென்னையை கரோனா இல்லா நகரமாக மாற்றுவோம் என்றும்,சென்னையில் 4 பேர் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 சிறுவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இது நிச்சயமாக அவர்களின் தவறு அல்ல. குடும்பத்தினரிடமிருந்துதான் தொற்றியிருக்க வேண்டும். பெரியவர்கள் கவனமாக இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும் என்றும், சென்னை அண்ணா சாலை முழுமையாக மூடப்பட்டதன் பயனாகச் சென்னையின் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து குறைந்திருக்கிறது. இது சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறைக்குப் பாராட்டுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, ஊரடங்கை உதாசீனப்படுத்தி ஊர்சுற்றும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஓர் வேண்டுகோள்: உலகையே ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து ஆண்ட இங்கிலாந்தின் இளவரசரும், பிரதமரும் கூட கரோனாவால் பாதிக்கப்பட்டு போராடி உயிர் பிழைத்துள்ளனர். இதை அனைவரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.