ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக கட்சிகளின் தலைவர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு தனது ஆதரவை தெரிவித்த நிலையில் அவரை ஆதரித்து பிப்ரவரி 19, 20, 21 என மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 15,16,17, 24,25 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதே போல் தென்னரசுவை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிப்ரவரி 19 மற்றும் 20 என இரு தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிப்ரவரி 19 முதல் 24 வரை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்ரவரி 13,14,15 மற்றும் 21 முதல் 25 வரை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். ஈரோடு தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.