அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, இன்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “சற்றும் எதிர்பார்க்காத வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்திருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என நாங்கள் கருதுகிறோம். தேர்தல் என்றால் முறைப்படி வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களுக்கு உரிய கால அவகாசம், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற விஷயங்களோடு தான் நடைபெற வேண்டும். ஆனால், திடீர் சாம்பார், திடீர் ரசம் என்பது போல இவர்கள் ஒரு தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் மாபெரும் இயக்கம். அந்த இயக்கத்தின் தேர்தலை முறைப்படி நடத்த சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி தான் நடக்க வேண்டும்.
நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அதற்கு மாறாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட விதிகளை மாற்றுவதோ அல்லது திடீர் தேர்தலை அறிவிப்பதோ மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். சட்ட ரீதியாக இதனைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். அவர்களின் இந்தச் செயல் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. நான் எம்.ஜி.ஆரின் இறுதி மூச்சு வரை உடன் இருந்தவன்; அதேபோல், ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் இறுதி மூச்சு வரை உடன் இருந்தவர். அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் ஆரம்பத்திலிருந்து இந்த இயக்கத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒன்றிணைய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு மாறாக எடப்பாடி தரப்பினர் இந்த இயக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த பாடத்தைக் கூட அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை; திருந்தவில்லை. எம்.ஜி.ஆர். மொழியில், ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்’ என்று சொல்லலாம். அவர்கள் திருந்துவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை இன்னும் வலுவாக்க அவர்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த இயக்கம் இப்படி அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறதே என உண்மையான தொண்டர்கள் மத்தியில் ஏக்கம் இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையூட்டும்படி நான் சொல்வது, இந்த இயக்கத்தை முறைப்படி நடத்தவும், நிர்வாகிகளை முறைப்படி தேர்ந்தெடுக்கவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த சட்ட விதியின்படி செயல்படுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். விரைவில் இதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம். இனியும் இவர்கள் திருந்துவார்கள் என்றோ, ஒன்றாக வருவார்கள் என்றோ நாங்கள் நினைக்கவில்லை, எதிர்பார்க்கவுமில்லை. அதைப் பற்றி பொருட்படுத்தவும் போவதில்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்த அனுமதி தந்தோம். இரட்டை இலை சின்னத்தை தந்தோம். எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றோம். இந்த இயக்கம் மீண்டு வரவேண்டுமென அத்தனையும் தந்தும் கூட அவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் உணர்ந்தாக வேண்டும். தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும். நமக்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை மீட்டெடுக்கப் போகிறோம்.
இதுவரை இவர்கள் ஒன்றாவார்கள் எனச் சட்டப்போராட்டம், நீதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளோம். இந்த இயக்கத்தை மீட்டெடுக்க அவர்களைப் பொருட்படுத்தவோ, கவலைப்படவோ போவதில்லை. விரைவில் நம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்டந்தோறும் தொண்டர்களைச் சந்திக்க இருக்கின்றனர்.
சிறுபிள்ளைகள் மணல் வீடு கட்டுவதைப் போல இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இயக்கத்தின் தொன்மையையும், அதன் வரலாற்றையும், அதன் தியாகத்தையும், அதற்காக தலைவர்கள் எவ்வாறு பாடுபட்டார்கள் என்பதையும், மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையும் அறவே உணராத ஒரு சிறுபான்மை கூட்டத்திடம் சிக்கித் தவிக்கிறது இந்த இயக்கம். தொண்டர்களின் மூச்சுக்காற்றால் பதர்கள் தூக்கி எறியப்படுவார்கள். அழகான நெல்மணிகள் அப்படியே நிற்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணியுங்கள்” என்று தெரிவித்தார்.