தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கூட்டுறவுத்துறை துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ஏன் எல்லோரும் அமைதியா இருக்கீங்க?. தேனி வந்தா சுறு சுறுப்பா இருப்பீங்கன்னு பார்த்தா, இப்படி இருக்கீங்களே? கை தட்டினா இதயத்துக்கு நன்கு ரத்த ஓட்டம் இருக்கும். வாட்ஸ் ஆப், யூ டியூப் பார்க்கிறது இல்லையா? கை தட்டுனா உடம்புக்கு ரொம்ப நல்லது. நல்லா கை தட்டுங்கள் என்று அவர் பேச ஆரம்பித்ததும். கூட்டத்தில் கலகலப்பு தொடங்கியது.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ஓபிஎஸ்க்கு பலரும் விளக்கம் சொல்வார்கள். நான் சொல்கிறேன். ஓ ஒற்றுமை, பி பாசம், எஸ் சேவை எனக் கூறினார். மேலும், துணை முதல்வரான "ஒபிஎஸ் வேட்டி கட்டிய அம்மா" என்று புகழ்ந்ததுடன் மட்டும்மல்லாமல் இரண்டு கவிதைகளை கூறி ஓபிஎஸ்சை வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் அண்ணன் என புகழ்ந்து பேச்சிலேயே நெருக்கம் காட்டியவர், இரண்டு வருடங்களுக்கு மேல் இத்துறையில் யாரும் இருந்ததில்லை இன்றோடு எனக்கு இத்துறையில் ஒன்பது வருடங்கள் ஆகிறது. இந்தியாவுக்கே முன்னோடியாக அதிக விருதுகளை பெற்றுள்ள துறையாக உள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். வாங்கிய கடனை நீங்கள் கட்டி விடுவீர்கள். பார்க்கத்தான் கரடுமுரடாக இருப்பீர்கள் தேனி மக்கள் பாசக்காரர்கள் என்றார்.
இந்த விழாவில் ஓபிஎஸ் மகனான எம்பி ரவீந்திரநாத் குமார், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.