
“2024 ல் 28 எம்.பி.களும் பாஜகவாக இருப்பார்கள். இது ராகுல் காந்தியின் கண் முன்னால் நடக்கும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தல்களை பொறுத்தவரை ஒரு கட்சி வெற்றி பெறும். ஒரு கட்சி தோல்வி அடையும். இந்திய ஜனநாயகத்தில் புதிது கிடையாது. கர்நாடக மாநிலத்தில் 1985க்கு பிறகு எந்த ஒரு கட்சியும் இதுவரை ஆட்சியை தக்கவைக்கவில்லை. 38 ஆண்டுகளாக நடைபெறாதது இந்த ஆண்டு நடக்கும் என முயற்சி செய்தோம். இம்முறையும் நடக்கவில்லை. இருந்தாலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும்.
நம்மூரில் தமிழில் ஒரு பழமொழி சொல்வோம். காக்கா வந்து பனை மரத்தின் மேல் உட்காரும் போது பனை காய் கீழே விழுந்தால் காக்கா வந்ததால் தான் காய் விழுந்ததாக சொல்வார்கள். கர்நாடகாவைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக பாஜக மூன்றரை ஆண்டுகள் இருந்துள்ளது. அதன்பின் மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. மாற்றத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை பொறுத்தவரை அவர்கள் பிரச்சாரம் செய்ததால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக சொல்லிக்கொள்வதெல்லாம், ராகுல்காந்திக்கே தெரியும் அது உண்மையில்லை என்று.
அடுத்ததாக தேர்தல் வரும் ராஜஸ்தான் சட்டிஸ்கர், மத்தியபிரதேசத்தில் கூட பாஜக ஆட்சியைப் பிடிக்கும். அதுமட்டுமல்ல. இதே கர்நாடகத்தில் 28 எம்.பி.க்களில் 25 பேர் பாஜகவாக உள்ளனர். 2024 ல் 28 எம்.பி.களும் பாஜகவாக இருப்பார்கள். இது ராகுல் காந்தியின் கண் முன்னால் நடக்கும். குறிப்பாக தென் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் 2024 ஆம் ஆண்டு பாஜக சரித்திரம் படைக்கும். பாதயாத்திரைக்கு இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். ஜூலை 2 ஆவது வாரத்தில் அதற்கான ஆயத்தப்பணிகள் செய்யப்படும். பாதை யாத்திரை பாஜகவின் வளர்ச்சிக்கும் தமிழக அரசின் மாற்றத்திற்கும் வித்திடும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.