Skip to main content

“பழனிசாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்” - ஓ.பி.எஸ் உறுதி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
I will send Palaniswami to Tihar Jail soon says Panneerselvam confirmed

திருச்சியில், அ.தி.முக. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பன்னீர்செல்வம், “நாலு பேரை வைத்துக்கொண்டு படாதபாடு பட்டதாக கூறிய பழனிசாமியிடம் தான், அவர்கள் யார் என்று கேட்க வேண்டும். முதல்வரானாலும், பொதுச்செயலாளரானாலும் எந்த தேர்தலில் வெற்றி பெற்றார் அவர். லோக்சபா தேர்தல், நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதற்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவுக்கு பிரதமர் வந்தபோது, அவரை வாழ்த்தி துண்டு சீட்டு கொடுத்தேன். அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான பிரச்சனையை பேசி வருகிறேன். அவர்கள் மனம் வெதும்பி உள்ளனர். சுயநலம் காரணமாகத்தான் பழனிசாமி அவர்கள் ஒன்று சேரக் கூடாது என்று சொல்கிறார். 50 ஆண்டுகளாகத் தியாக வாழ்க்கை மேற்கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிப்படி இயக்கத்தை நடத்தினர். அதில் கை வைத்துள்ளார் பழனிசாமி.   அவருடன் இருப்பவர்கள், ‘நாங்கள் என்ன சொன்னாலும் பழனிசாமி கேட்க மறுக்கிறார்’ என்று மன வேதனையோடு பேசுகின்றனர்.

தேர்தலுக்கு முன், ‘நான் முதல்வராக வந்த பின், 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவேன்’ என்றார் ஸ்டாலின். அவரும் பழனிசாமியும் கூட்டணி வைத்திருப்பதாக நான் சொல்லவில்லை மக்கள் சொல்கின்றனர். ஏன் அந்த வழக்கை தாமதப்படுத்துகின்றனர் என்று மக்கள் கேட்பதை நானும் கேட்கிறேன். மோடி தான் பிரதமராக வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது. இந்தியா கூட்டணி என்பது ஆண்டிகள் கூடி கட்டிய மடம்.

பழனிசாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன். அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன்.  வரும் லோக்சபா தேர்தலில் இறைவன் தந்த சின்னத்தில் நான் போட்டியிடுவேன். அ.தி.மு.க. சின்னம் தொடர்பான விவகாரத்தை உச்சநீதி மன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வரும் 19ம் தேதி பொதுக்குழு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. அதில் கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில் நீதிக்கு தலை வணங்குவோம். நியாயமான இலக்கை அடைவதற்காக சோர்வு இல்லாமல், அடிக்க அடிக்க எழும் பந்தை போல் எழுவோம். எங்களை யார் பின்னுக்கு தள்ளினாலும் முன்னேறிக் கொண்டுதான் இருப்போம்” என்றார்.

சார்ந்த செய்திகள்