தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது.
இதையடுத்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024) மாலைக்குள் புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து தென் கிழக்கு திசையிலும் 370 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 470 கி.மீ. தென் கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.தமிழகத்தில் இரவு 10 மணி வரை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அறிவிப்பின் அடிப்படையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நாளையும் (28/11/2024) புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.