இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்சனைகளையும் மக்கள் பிரச்சனைகளையும் பேச அனுமதி அளிக்கவில்லை என கூறி எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலளர் இரா. முத்தரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, “மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுகிற ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வருகிற 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரம் மற்றும் கிராமங்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்” என அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று (23.08.2021) காலை 9.00 மணிக்கு சைதை தொகுதியைச் சேர்ந்த 170வது வட்ட ஈக்காடுதாங்கலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் கிளை சார்பில் மக்கள் நாடாளுமன்றம் கூடியது. துவக்கத்தில் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தேசிய கொடியேற்றினார். நாடாளுமன்றத்தின் நியமன சபாநாயகராக வி.கே. கோபாலன் பொறுப்பேற்று, நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நா. ராதாகிருஷ்ணன் (திமுக) அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநிலச் செயலர் மட்டுமன்றி மு. வீரபாண்டியன், நா. பெரியசாமி, வஹிதா நிஜாம், எஸ். ஏழுமலை ஆகியோரும் ஏ. பாக்கியம் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), எம்.ஏ. முத்தழகன், எஸ். விவேக், பூங்கொடி, ஜோதி பொன்னம்பலம் (காங்கிரஸ்) ஆகியோரும் பங்கேற்று பேசினார்கள்.
மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தின் இறுதியில் நா. பெரியசாமி, மத்திய பாஜக அரசின் நாடாளுமன்ற நெறிமுறைகள் மீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழிக்கும் போக்கினைக் கண்டித்தும், விவசாய வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ளக் கோரியும், பாதுகாப்புத்துறை தளவாடங்கள், உற்பத்தி நிலையங்களைத் தனியாருக்கு கொடுப்பதைக் கைவிடக் கோரியும், பெட்ரோல் டீசல் விலைகளைக் கட்டுப்படுத்தக் கோரியும் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார். இத்தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேறின.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2019 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்தம் பண்ணைகள் மற்றும் சேவைகள் (ஊக்கப்படுத்தும் மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2019யை திரும்பப் பெற வேண்டும் என்கிற தீர்மானமும் அதனுடன் சேர்த்து நிறைவேற்றப்பட்டது. ஆர். விஜயக்குமார் (இ.கம்.கட்சி) நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் மக்கள் நாடாளுமன்றம் நிறைவுற்றது. இம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் அமைச்சக செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படுகிறது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாககிகள் பலர் கலந்துகொண்டனர்.