Skip to main content

''கரப்ஷன்... கலெக்சன்... வென்டேட்டா...'' - எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

 

கொடநாடு விவகாரத்தை திமுக மீண்டும் கையிலெடுப்பதாகவும், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் தெரிவித்து சட்டப்பேரவையை அதிமுக இரண்டு நாட்கள் புறக்கணித்திருக்கும் நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓபிஎஸ் இருவரும் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்தனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் இருந்தனர். 

 

கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை அதிமுக புறக்கணித்திருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக பொய் வழக்கு போடுவதாக இந்தச் சந்திப்பில் ஆளுநரிடம் முறையிட்டு மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில் ஆளுநருடனான சந்திப்பை அடுத்து வெளியே வந்த ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ''அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஊழலால் தங்களது பாக்கெட்களை நிரப்புவதிலேயே மும்முரமாக உள்ளனர். பொய்யான வழக்கை எங்கள் மீதும் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும் தொடர்ந்து வாடிக்கையாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது குறிக்கோளே ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் என இதைத்தான் திமுக செய்துவருகிறது. கரப்ஷன், கலெக்சன், வென்டேட்டா இதைத்தான் திமுக செய்துவருகிறது. 100 நாட்களில் வசூல் செய்ததுதான் அவர்களின் சாதனை. திமுகவின் 100 நாள் சாதனை அரசு உயரதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள் வரை பணியிட மாற்றம் செய்ததுதான். கொடநாடு கொலை வழக்கில் சயானிடம் விசாரணை நடத்த எந்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது என்பதை முதல்வர் விளக்க வேண்டும். உண்மையான குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்றால், இதுவரை பிடித்தது போலி குற்றவாளியா? சமூக வலைதளத்தில் போடப்பட்ட பழைய பதிவுகளை வைத்து அதிமுகவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுவருகிறது. கரோனா எண்ணிக்கையை மறைத்துக்காட்டிவருகின்றனர். கரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவது பற்றி திமுகவுக்கு கவலையில்லை. எனவே இந்த 100 நாட்களில் சோதனையையும் வேதனையையும்தான் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்