Skip to main content

நெல் கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும்! -ராமதாஸ் 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
ramadoss




நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2020-21 ஆம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.53 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நெல்லுக்கான உற்பத்தி செலவைவிட குறைவாக  நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நெல் கொள்முதல் விலை உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் குறுவை பயிர்களுக்கான கொள்முதல் விலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.1815-லிருந்து ரூ.53 உயர்த்தப்பட்டு ரூ.1868 ஆகவும், சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.1835-லிருந்து ரூ.53 உயர்த்தப்பட்டு ரூ.1888 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கொள்முதல் விலை உயர்வு மிகமிகக் குறைவு ஆகும். இது உழவர்களின் துயரங்களை எந்த வகையிலும் தீர்க்காது.

 

 


உயர்த்தப்பட்ட நெல் கொள்முதல் விலையின்படி, உழவர்களுக்கு உற்பத்தி செலவைவிட 50 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது எந்தவகையிலும் சரியானது அல்ல. 2019-20 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்தி செலவு ரூ.1,782.21 ஆகும்.  2020-21 ஆம் ஆண்டில் நெல் சாகுபடி செலவு 5% உயர்வதாக வைத்துக்கொண்டால், நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்தி செலவு ரூ.1,871.32 ஆக இருக்கும். அத்துடன், 50% இலாபம் ரூ.935.66 சேர்த்து, ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக ரூ.2,806.98  நிர்ணயிக்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும். மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையே, உற்பத்தி செலவை விட குறைவாக இருக்கும் நிலையில், அதில் எவ்வாறு 50% லாபம் கிடைக்கும் என்பது தெரியவில்லை.

விவசாயம் லாபகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் சுவாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், கள எதார்த்தத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத செலவு கணக்குகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயித்ததால், அது உழவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கவில்லை. நெல்லுக்கான உற்பத்தி செலவை கணக்கிடும்போது,  விவசாயியின் மனித உழைப்பில் தொடங்கி, நீர் பாய்ச்சுவதற்கான செலவுகள் வரை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால், பெரும்பான்மையான செலவுகளை கணக்கில் கொள்ளாமல் உற்பத்தி செலவை மத்திய அரசு நிர்ணயித்திருப்பது தான் கொள்முதல் விலை குறைவாக இருக்க காரணமாகும்.

 

nakkheeran app




உழவர்கள்தான் இந்த உலகை வாழ வைப்பவர்கள், அதேநேரத்தில் இந்த உலகில் சபிக்கப்பட்ட சமூகமும் அவர்கள்தான். உழவுக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களும் ஆண்டு ஆண்டு கடுமையாக விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் சுமையை உழவர்கள்தான் தாங்க வேண்டியுள்ளது. ஆனால், உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு மட்டும் உரிய விலை ஒரு போதும் கிடைப்பதில்லை. இப்போது கூட நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.53 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது 2.88% உயர்வு ஆகும். உலகில் எந்தத் தொழில் பிரிவினருக்கும் இவ்வளவு குறைவாக வருவாய் உயர்வு அறிவிக்கப்படுவதில்லை. உழவர்களுக்கு மட்டும் தான் இத்தகைய அநீதி இழைக்கப்படுகிறது.

இந்த அநீதி சரி செய்யப்பட வேண்டுமானால், நெல்லுக்கான கொள்முதல் விலை, அதன் உற்பத்திக்கான அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு, அத்துடன் 50% லாபமும், போக்குவரத்து உள்ளிட்ட அறுவடைக்கு பிந்தைய செலவுகளையும் சேர்த்து, குறைந்தது குவிண்டாலுக்கு ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப் பட வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.   

 

சார்ந்த செய்திகள்