சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். ஆர்.கே.நகரில் எப்படி உற்சாகமாக வேலை பார்த்தோமோ அதைப்போலவே 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளிலும் வேலை பார்க்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மாநில கட்சிகளுடன்தான் கூட்டணி என்று கூறிவந்த அமமுக, பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் கூட்டணி வைக்க தயங்கியதாகவும் கூறப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது அமமுக.
புதுச்சேரி உள்பட மீதமுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்த நிலையில், திடீரென பாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சிலர் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்து பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிட விரும்புவதால் பட்டியல் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட தாமதம் ஆகிறது என்று நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலர் தெரிவித்தனர்.
மேலும், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான உடன், அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது போல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.