திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக லிவ் இன் உறவில் இருந்த ஆண் மீது பெண் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த நபர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர சிங் ஆகியோர் அமர்வு முன் வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீண்ட காலமாக நீடித்து வரும் ஒருமித்த உறவுகள், கசந்தவுடன் நீதித்துறையைப் பயன்படுத்தி குற்றமாக்க முற்படுவது கவலையளிக்கும் டிரண்ட் காணப்படுகிறது. இதை இது போன்ற ஏராளமான வழக்குகளில் இருந்து இந்த நீதிமன்றத்தால் தெளிவாக காணமுடிகிறது.
எங்கள் கருத்துப்படி, எதிர்ப்பு எதுவும் இன்றி இருவருக்கும் இடையே நீண்ட கால உடல் சார்ந்த உறவுகள் இருக்கும் போது, திருமணத்திற்கு பெண் வற்புறுத்தினால், அது கருத்தொருமித்த ஓர் உறவுக்கான அடையாளம். திருமணம் செய்து கொள்வதாக ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்து ஒரு ஆண் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டால், அத்தகைய எந்தவொரு உடல் உறவும் பொய்யான வாக்குறுதியை நேரடியாகக் கண்டறியக்கூடியதாக இருக்க வேண்டும்’ என்று கூறி அந்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குப்பதிவு ரத்து செய்து உத்தரவிட்டனர்.