
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி நடத்தி வரும் விஜய் கட்சியின் முதல் மாநாட்டை கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார். சமீபத்தில் மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மோதரம் அணிவித்து விருந்து வைத்தார் விஜய்.
இந்த நிலையில் மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் திரண்டு இருந்தனர். மேலும் மற்ற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்றிருந்தனர். அப்போது மாநாட்டிற்கு சென்ற போதும் மாநாடு முடிந்து புறப்பட்ட போதும் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த வசந்த குமார், ரியாஸ், சார்லஸ், உதயகுமார் மற்றும் திருச்சியை சேர்ந்த விஜய் கலை, சீனிவாசன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தாருக்கு த.வெ.க. விஜய் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பொதுநிகழ்ச்சியாக இல்லாமல் தனிப்பட்ட நிகழ்ச்சியாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் ஒவ்வொரு குடும்பத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு இறந்தவர்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தையும் ஏற்க முடிவுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.