தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அடுத்து வரும் 4 நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (29.11.2024) டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் தஞ்சாவூர், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30ஆம் தேதி (30.11.2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், வேலூர். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி (01.12.2024) நீலகிரி கோவை ஈரோடு திருப்பூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (29/11/2024) விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.