எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய மாநகராட்சி டெண்டர் முறைகேடு விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி சாலைகளின் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 590 கோடி மதிப்பீட்டில் 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அதன்படி அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020 ஆம் ஆண்டில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெயராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது. இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி விளக்கமளித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை எடுக்க வேண்டியது மாநில அரசு தான். சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாது. அதன் அடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.