அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட அன்றே, ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓ.பி.ஜெயபிரதீப் உள்ளிட்டோரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவர் அ.தி.மு.க.வில் இல்லை எனச் சுட்டிக்காட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். கட்சியில் இருந்து நீக்கியதால், அவரை அ.தி.மு.க. எம்.பி.யாக கருத வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பதில் கடிதம் எழுதினார். அதில், அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் இருப்பதால் இந்த கடிதத்தை ஏற்க கூடாது எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர், ரவீந்திரநாத் எம்.பி.யை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என்ற இ.பி.எஸ். கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். ரவீந்திரநாத்தை அதிமுகவில் இருந்து இ.பி.எஸ். நீக்கியதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சசிகலாவும் ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கத்தை கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.