Skip to main content

கூட்டம் நடத்திய ஓபிஎஸ்; கூண்டோடு தூக்கிய இபிஎஸ் - ஈரோடு அதிமுகவில் பரபரப்பு!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

OPS supporters joined AIADMK led by Palaniswami

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 

முன்னதாக இபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவித்து வேட்புமனுவையும் தாக்கல் செய்தது. ஆனாலும் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், பாஜக தனது முடிவு என்ன என்பது குறித்து எந்தவிதமான பதிலையும் தரவில்லை. இந்நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், பொதுக்குழுவில் வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஓபிஎஸ் தரப்பும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தின் நலன் கருதி தனது வேட்பாளரை திரும்பப் பெற்றது. அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். 

 

இதனைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்பினரின் பேச்சாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சின்னத்திற்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத நிலை வந்தது. இதனிடையே, அதிமுக ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.

 

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் அதிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். ஓ.பி.எஸ் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் தங்கராஜ், ஈரோடு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் இ.பி.எஸ் அணியில் இணைந்தனர். மேலும், ஈரோட்டில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அனைவரும் விரைவில் இ.பி.எஸ் அணிக்கு வருவார்கள் என அணிமாறியவர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஓரிரு தினங்களுக்கு முன்பு தனது தரப்பு ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை கூட்டம் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்