விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேசியதாவது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்குப் பல்வேறு சீர்மிகு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றினார். அதேபோல், நடுத்தர, ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தனது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். அதன் மூலம் மக்கள் பயனடைந்தனர். அவரது மறைவிற்குப் பின் முதல்வராக இருந்த பழனிசாமி, ஜெயலலிதா காட்டிய வழியில் எந்தக் குறையும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் ஆட்சி நடத்திவந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில் பல வியூகங்களை வகுக்காததால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. தற்போது நமது இயக்கமான அதிமுகவின் வலிமையைக் காட்டும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும். தேர்தல் முடிந்தவுடன் நாங்களா அப்படியெல்லாம் கூறினோம் என்று மறுப்பதோடு, தாங்கள் கூறிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் அது எல்லாம் சாத்தியப்படாது என்று கையை விரித்துவிடும். கலைஞர் இருந்த காலத்திலிருந்தே திமுகவினர் அப்படித்தான் பேசுவார்கள்; மக்களை ஏமாற்றுவார்கள்.
திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் உரிய விசாரணை நடைபெறுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. நமது கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தாலும், பலமான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையிலும் நாம்தான் ஆளுங்கட்சியைக் காட்டிலும் மக்களுக்கான ஜனநாயக கடமைகளை ஆற்றிவருகிறோம்.
வரும் 17ஆம் தேதி அதிமுக துவக்கப்பட்ட 50ஆம் ஆண்டு பொன்விழா நடைபெற உள்ளது. அதை ஒட்டி நாம் செய்யும் நன்றிக்கடனாக உள்ளாட்சித் தேர்தலில் நமது கட்சியினர் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். வரப்போகும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதில் அடையும் வெற்றிக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அஸ்திவாரமாக இருக்க வேண்டும்.” இவ்வாறு ஓ.பி.எஸ். கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.