ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளதாக இ.பி.எஸ் அணி தெரிவித்திருந்ததது. அதே சமயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்களும் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். மேலும் எங்களது கூட்டணி கட்சிகளை நேரில் சந்தித்து அதரவு கோரவுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி.,யை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். அவருடன் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் சென்றிருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ், ஜி.கே வாசனை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர கேட்டுள்ளோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
மேலும் மாலை 4 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கமலாலயத்தில் சந்தித்து பேசவுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரையும் சந்த்தித்து பேசவுள்ளார்.