மே 19ஆம் தேதி ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை 2-வது கட்ட பிரசாரம் செய்தார்.
வல்லநாட்டில் பொதுமக்களிடையே பேசிய அவர்,
சிலரது சூழ்ச்சியால் இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. ஆனால் சிலர் வேண்டுமென்றே ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்று துடிக்கின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க.தான் விலாசம் கொடுத்தது. இரட்டை இலை சின்னம்தான் அவருக்கு தகுதியை பெற்றுக் கொடுத்தது. அதே இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைப்பவர் டி.டி.வி.தினகரன். அவர் தி.மு.க.வுடன் ரகசிய உடன்படிக்கை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தி.மு.க.வுடன் ரகசிய உடன்படிக்கை வைத்து அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். இங்கே இருப்பவர்கள் எப்படி விவசாய பணியை மேற்கொள்கிறீர்களோ அதுபோன்ற உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தவன். உங்கள் பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவன். மதுரையில் மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நான் சிவப்பாக இருக்கிறேன். கவர்ச்சியாக இருக்கிறேன். தற்போது 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ததால் கருப்பாகி விட்டதாக மக்களிடம் பேசுகிறார். இப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள்? இங்கு இருக்கும் மக்கள் மழையை பொருட்படுத்தாமல், வெயிலை பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் உழைத்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படிப்பட்ட மக்களை சிந்தித்து பார்த்தாரா?
4 நாட்கள் வெயிலில் சென்றாலே கொடைக்கானல் சென்று உல்லாசமாக இருக்கிறார்கள். 26 நாட்கள் தொடர்ந்து காலை முதல் மாலை வரை அனைத்து பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தேன். உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன். பொதுமக்களும் உச்சி வெயிலை பொருட்படுத்தாமல் அந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் மு.க.ஸ்டாலின். ஏ.சி.யிலேயே படுத்து இருந்தவர். அவரால் 4 நாட்கள் வெயிலை தாங்க முடியவில்லை. இவரை 40 நாள் வெயிலில் போட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்று விடுவார்.
அப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் இங்குள்ள மக்களின் கஷ்டங்களை தெரியாதவர்கள். நாங்கள் உங்களோடு இருந்து பழகியவர்கள். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கிராம மக்களோடு இணைந்து வாழ்க்கை நடத்தியவன். கிராமத்தில் உள்ள கஷ்டங்கள் என்ன? அவர்களின் இன்னல்கள் என்ன? அதனை களையும் அனுபவத்தை கண்டவன். அந்த அனுபவத்தின் வாயிலாக அரசு மக்களுக்கு தேவையான அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம்.
ஸ்டாலின் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்போம் என்கிறார். அவர்கள் குடும்பத்திடம் உள்ள டி.வி. சேனல்களின் கட்டணத்தை குறைக்கட்டும். மு.க.ஸ்டாலின் குடும்பமும், தயாநிதி மாறன் குடும்பமும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க மத்திய அரசிடம் பேசி, தற்போது உள்ள கட்டணமான ரூ.100-க்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.