அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்படுவாரா என்று நாளை நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் தெரிந்துவிடும் என்ற பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பல்வேறு நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''பலர் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகின்றனர். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை தப்புக்கு மேல் தப்பு செய்கிறார். எம்.ஜி.ஆர் ஒரு பாடலில் சொல்லுவார் 'பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊரை சேர்வதில்லை' என்று, அந்தவகையில் தவறான பாதையை நோக்கித்தான் ஓபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார் என்ற எனது ஆழ்ந்த கவலையை நான் மனக்கஷ்டத்தோடு இங்கே வெளிப்படுத்துகிறேன்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'நாளை நடக்க இருக்கும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பாரா?' என கேள்வி எழுப்ப, ''எனக்கு ஜோசியம் பார்த்து பழக்கமில்லை... இதை நீங்கள் அவரிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்'' என்றார்.