முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையிலேயே ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் கருப்பணனை விளாசித் தள்ளிய விவகாரம் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பாகி இருக்கிறது.
கடந்த 16-ஆம் தேதி அ.தி.மு.க. தலைமையகத்தில் நடந்த மோதல் குறித்து அ.தி.மு.க.வினரே நம்மிடம் கூறினார்கள். பகுதிச் செயலாளர் மனோகரன் பேசும்போது, "எனக்கு வருமானம் இல்லை, அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே கமிஷனை பிரித்துக்கொள்கிறார்கள். எனக்கும் 2 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் கட்சியை நடத்தமுடியும்' என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி, "மனோகரா இப்போ எவ்வளவு சம்பாதிக்கிறீங்கனு தெரியும். இன்னும் கமிஷன் வேண்டுமா?' என்று கூறி, அவரை உட்காரச் சொன்னார்.
"ஈரோட்டில் கட்சி செயல்பாடே இல்லை. ஒரு கூட்டத்தைக் கூட கருப்பணன் கூட்டவில்லை. இதேநிலை நீடித்தால் வர்ற எலெக்ஷன்ல ஒரு சீட்கூட ஜெயிக்க முடியாது' என்று ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு கோபமாக கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம், ஜெயலலிதா இருக்கும்போது அறிவிக்கப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை, தனது கமிஷன் கொள்ளைக்காகவே நிறைவேற்றவிடாமல் கருப்பணன் தடுப்பதாக கூறினார். "அவர் மீது ஏதேனும் புகார் இருந்தா எழுதிக் கொடுங்க' என்ற எடப்பாடியிடம், "ஏற்கெனவே கொடுத்த புகார்கள் என்னாச்சு?' என்று கோபமாக கேட்டார். அதற்குப் பதிலளித்த எடப்பாடி, "புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்போம். எதையும் தனிப்பட்ட முறையில் பேசாதீங்க' என்றார். உடனே, குறுக்கிட்ட ராமலிங்கம், "பிறகெதுக்கு இந்த கூட்டம்? மக்களவைத் தொகுதிக்கு அமைச்சரிடம் பெரிய சைஸ் 10 கொடுத்தீர்கள். ஆனால், ஒரு பைசாகூட செலவழிக்காமல் வைத்துக்கொண்டார். எனது பங்கிற்கு செலவழித்த இரண்டேமுக்காலையும் இதுவரை எனக்குக் கொடுக்கவில்லை' என்று சொல்லிக்கொண்டே போனார்.
உடனே குறுக்கிட்ட திண்டுக்கல் சீனிவாசன், "பணத்தைப் பற்றி பேசாதீங்க. வெளியே தெரிஞ்சா அசிங்கம்' என்றார். உடனே, "அப்போ பணத்தை நீங்க கொடுப் பீங்களா?' என்று கேட்டதும் அமைதி யாகிவிட்டார்.
அதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் "உங்க பிரச்சனையை தனியா பேசுவோம் அமைதியா இருங்க' எனக்கூற, சரி எப்ப பேசலாம் சொல்லுங்க' என்று மீண்டும் கேள்வியை தொடர்ந்தார் ராமலிங்கம். இதையடுத்து, “சரி, அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திடுங்க' என்று தலைமை நிர்வாகிகள் கருப்பணனிடம் கூறினார்கள். அதன்பிறகு கருப்பணன் மீது புகாரை எழுதி வாங்கினார்கள்.
இந்தக் கூட்டத்தில் கருப்பணனுக்கு எதிராக எடப்பாடி முன்னிலையிலேயே ராமலிங்கம், தென்னரசு, தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் கடுமையாக பேசியிருக்கிறார்கள்.
கூட்டத்தில் பங்கேற்ற கருப்பணன் ஆதரவாளர்கள் பலரும் முதல்வர் எடப்பாடியிடம், “என்னங்க உங்களுக்கு சம்பந்தி முறையாகுது. அதுக்காகவாச்சும் கருப் பணனை காப்பாத்துங்க'' என வெளிப்படையாகவே கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு எம்.எல்.ஏ. நம்மிடம், "கடந்த முறை சசிகலா சகோதரர் திவாகரன் மூலம் அமைச்சரானார். கொஞ்சம்கூட நிர்வாகம் பற்றி அக்கறையில்லாதவர். 2001-ல் சாதாரண எம்.எல்.ஏ. ஆனால் இன்று பாருங்க... பெரிய அதிபதி. எல்லாம் அரசியல் அதிகாரத்தை வைத்துதான்'' என்றார்.
இத்தனை களேபரத்துக்கும் இடையே, அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரும் கலந்துகொண்டிருந்தார். இவ்வளவு கலவரத்துக்கும் அவர் வாயையே திறக்காமல் அமைதியாக இருந்தார். அந்த சீனியர் யார் தெரியுமா? அமைச்சர் செங்கோட்டையன்தான். ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார். ஆனால், அவரால் கட்சிக்கு வந்த ஜூனியர் எடப்பாடியோ, கேள்வி கேட்கும் தலைமை இடத்தில் அமர்ந்திருந்தார்.