நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சிவகங்கை சத்தியமூர்த்தி நகரில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று (03-02-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ராமசாமி, சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சரின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்துக்கு, சிவகங்கை தொகுதியை தரக்கூடாது. மேலும், ராகுல் காந்திக்கு எதிராகப் பேசிய கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், ‘மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை. ராகுல் காந்தி கூட மோடிக்கு நிகரான தலைவர் இல்லை என்றும், ஆனாலும் முறையாக வியூகம் அமைத்தால் மோடியை வீழ்த்தலாம்’ என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.