Published on 13/07/2019 | Edited on 13/07/2019
அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுக கட்சியில் இருக்கும் சீனியர்கள் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத இரண்டு வேட்பாளர்களை அதிமுக தலைமை தேர்ந்தெடுத்தது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.மேலும் வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் ஆதரவு சீனியர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மாநிலங்களவை எம்.பி.க்கு தேர்வான இரண்டு ராஜ்ய சபா எம் .பி.களும் தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
ஒருவர் கூட தென் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக மீது அதிருப்தி ஏற்படும் என்று ஓபிஎஸ் தரப்பு கருதியதாக தெரிவிக்கின்றனர். இதனால் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ் தரப்பு பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறுகின்றனர். வேட்பு மனு தாக்கலின் போது கூட்டணி கட்சியான பாமகவும் வருவதால் மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ் வந்தார் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவிக்கிறது. இதனால் ஓபிஎஸ், எடப்பாடி அணி என்று மீண்டும் உருவாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது என்கின்றனர்.