கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.திக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த ஒருவார காலமாக விருத்தாசலம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில், இன்று விருத்தாசலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “விருத்தாசலத்தில் கடந்த 10 நாட்களாக அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறேன். மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. நான் போகாத ஊரே இல்லை. ஏற்கனவே விஜயகாந்த் ஜெயித்த தொகுதியில், அவர் மக்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும்.
அவர் செய்த நலத்திட்டங்களை மக்களே என்னிடம் தெரிவிக்கின்றனர். அது நிச்சயமாக வாக்குகளாக மாறும். மேலும் அமோக வரவேற்பு உள்ளது. அ.ம.மு.க கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகின்ற நிலையில், விருத்தாசலத்தில் சுயேட்சையாக ஒரு பெண்ணிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுவர்களில் சின்னங்கள் வரையக் கூடாது என விதிமுறைகள் உள்ளது. ஆனால், அதனையும் மீறி அந்தச் சின்னம் நகரப்பகுதியில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அந்தச் சின்னம் இருக்கக்கூடாது எனத் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரை முடிவு வரவில்லை. விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். சுதீஷ் வேட்புமனுத் தாக்கல் செய்த அன்று மட்டும்தான் இருந்தார், உடனே ஊருக்குக் கிளம்பிவிட்டார். அப்படி இருக்கும்போது எனக்கு கரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி நான் பிரச்சாரத்தில் இருந்தபோது என்னை வலியுறுத்தியது, கண்டிக்கத்தக்கது.
234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்துள்ளார்களா? எனக்கு ஏற்கனவே கரோனா வந்துவிட்டது எனத் தெளிவாகக் கூறினேன். ஏற்கனவே பரிசோதனை செய்துவிட்டுத்தான் பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன். கரோனா தடுப்பூசி இரண்டு முறை போட்டுள்ளேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை எனத் தெளிவாகச் சொல்லியும் பரிசோதனைக்கு வரவேண்டும் எனக் கூறி என் பிரச்சாரத்தை தடை செய்யவே முயற்சி எடுத்தனர். அதை நாங்கள் கண்கூடாகவே பார்த்தோம், ஆனால் நாங்கள் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டவர்கள். அதனால் மதிய உணவிற்கு வரும்பொழுது வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கூறினேன், அதுபோலவே வந்து டெஸ்ட் எடுத்தனர். பின்னர் ஐந்து மணி நேரத்தில் முடிவு கொடுப்பதாக தெரிவித்தனர், ஆனால் மறுநாள் ஆகியும் ரிசல்ட் வரவில்லை. என்னைப் பிரச்சாரத்திற்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இது குறித்து அறிந்த நான், தனியாகவும் பரிசோதனை எடுத்துக் கொண்டேன். அரசு சார்பில் பரிசோதனை எடுத்தாலும் அதனைக் காரணமாகக் கொண்டு என்னை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பார்கள் என்பதால் பிரைவேட் மூலம் டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். அன்று இரவே எனக்கு ஏழு மணிக்கு ரிசல்ட் நெகடிவ் எனத் தெரியவந்தது. அரசு தரப்பில் எடுத்த பரிசோதனை முடிவை மறுநாள் வரை கூறவே இல்லை. எனக்குத் தனியார் மூலம் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததை தெரிந்துகொண்ட பிறகு நெகட்டிவ் என சர்டிபிகேட் கொடுத்தனர். இது எனக்கு உண்மையாகவே மன வருத்தத்தைக் கொடுத்தது. வேட்பாளர் என்பவர் மக்களைச் சந்திக்க வேண்டும், அதைத் தடுக்க நினைத்தார்களே தவிர மக்களை சந்திக்க விடவில்லை. கடவுள் இருக்கிறார், அதனால் எனக்கு நெகட்டிவ் என உறுதியானது.
மக்களை சந்திக்கும் என்னை யாராலும் தடுக்க முடியாது. தே.மு.தி.கவின் தேர்தல் அறிக்கை மொத்தம் 16 உள்ளது. விருத்தாசலத்தை பற்றி 2006 இல் இருந்து எனக்குத் தெரியும். விருத்தாசலத்தில் எனக்குத் தெரியாத இடங்களே கிடையாது. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தான் எங்களுடைய முதல் வாக்குறுதி. இது விவசாயம் சார்ந்த பூமி. சித்தூர், பெண்ணாடம் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன, இதனால் விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. விளைவித்த கரும்புகளை எங்கே அனுப்புவது எனத் தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அனைத்துப் பிரச்சினைகளும் சர்க்கரை ஆலைகளை மையப்படுத்தி அமைந்துள்ளது.
இந்த ஆலைகளை மீண்டும் திறந்து விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகைகளை பெற்றுத்தருவதே, அடுத்த வாக்குறுதியாகும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை தவித்த வாய்க்குத் தண்ணீர் தரவேண்டும். ஆனால் நாங்கள் கொடுத்ததைக் கூட இந்த ஆட்சி தடுக்கிறது. பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. நான் ஜெயித்து வந்த உடன் தண்ணீர்ப் பிரச்சனையைச் சரி செய்யப்படும், வடிகால் வசதி சாலை வசதி செய்து தரப்படும், வேப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுகாதார நிலையங்கள் அமைத்துத் தரப்படும். நகைக் கடன் தள்ளுபடி ஒட்டுமொத்த பெண்களையும் மொத்தமாகப் பாதித்துள்ளது. சொத்து உள்ளவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி ஆகிவிட்டது, சொத்து இல்லாதவர்களுக்கும் நகைக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒட்டுமொத்த பெண்களின் குரலாக நிச்சயமாக சட்டசபையில் பேசுவேன்.
சொத்து இல்லாமல் இருப்பவர்கள் தான் உண்மையான ஏழைகள், அவர்களுடைய நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நான் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றுவேன். கேப்டன் விஜயகாந்த் 234 தொகுதிக்கும் தலைவர். நான்தான் அவருக்காக விருத்தாசலம் தொகுதியில் வேலை பார்த்தேன், அது நன்றாக எல்லோருக்கும் தெரியும். நான் விருத்தாசலம் தொகுதியில் வீடு பார்க்கச் சொல்லி விட்டேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து மக்கள் பிரச்சினைக்காக முழு நேரமாக ஈடுபடுவேன். விருத்தாசலம் தொகுதிக்கு விஜயகாந்த் நிச்சயம் பிரச்சாரத்திற்கு வருவார். கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து கடந்த 4 நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விருத்தாசலம் மட்டுமில்லை, மருத்துவரின் ஆலோசனையின்படி தே.மு.தி.க போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளுக்கும் வருகிறார். எந்தத் தேதியில் வருகிறார் என அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.