சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வசமிருந்த பொருளாளர் பதவியானது திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமையக கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.
இந்த நிகழ்வின்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்
இந்த நிலையில், அதிமுக தலைமையகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்த நிலையில், அதனை ஏற்ற நீதிபதி சதீஷ் குமார், வழக்கை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
அதிமுக தலைமையகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று காலை மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இருவரது மனுவையும் அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.