வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் (தனி) தொகுதியை, அதிமுக தலைமை, புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு, பூவை.ஜெகன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால், அந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான அதிமுகவை சேர்ந்த லோகநாதன் அதிருப்தியில் உள்ளார். இதுகுறித்து வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கிவிட்டார் லோகநாதன்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிட்டிங் எம்.எல்.ஏ தொகுதியை ஒருகட்சித் தலைமை எப்படி விட்டுக்கொடுக்கும். விட்டுக்கொடுத்தது என்றால், அதற்குக் காரணம் அமைச்சர் வீரமணி தான். பாமக வலிமையாகவுள்ள அணைக்கட்டுத் தொகுதியை விட்டுத்தராமல் பெற முடிந்த வீரமணியால், சிட்டிங் தொகுதியைப் பெறாமல் விட்டதுக்கு காரணம் சாதி வெறிதான்.
தலைமையில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க வைத்துவிட்டார். அணைக்கட்டுத் தொகுதியை தனது சாதிக்காரர் என்பதால் புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகனுக்கு வாங்கித் தந்தார் வீரமணி. சிட்டிங் எம்.எல்.ஏவான எனக்கு கே.வி.குப்பத்தை மீண்டும் வாங்கித் தர முடியாததுக்குக் காரணம், அவரிடமுள்ள சாதி வெறியைத் தவிர வேறு என்ன” எனக் கேள்வி எழுப்புகிறார்.