கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தங்களது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவித்த பிறகு பாஜகவும் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாக வந்துகொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக கர்நாடகா நடிகர் கிச்சா சுதீப்பை பாஜக களமிறக்கியுள்ளது. இதனை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ள நிலையில், பாஜக காங்கிரஸுக்கு பதிலும் கொடுத்துள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது ஓ.பி.எஸ். கொடுத்த ஒரு கடிதத்தையும் புகழேந்தி, எடியூரப்பாவிடம் கொடுத்தார்.
இந்நிலையில் ஓ.பி.எஸ்., இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “கர்நாடகா மாநிலத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம்” என்றார்.
காலையில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடகா பாஜகவின் முக்கியத் தலைவருமான எடியூரப்பாவை ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி சந்தித்து பேசினார். இந்நிலையில், கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கர்நாடகாவில் ஓ.பி.எஸ். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.