சலசலப்புடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்துமுடிந்த நிலையில் தற்பொழுது வரை அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் நீண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இருதரப்பும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்பொழுது பேசிய சி.வி.சண்முகம், ''ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் கொலை, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இன்று கஞ்சா விற்பனை தலைநகரமாக சென்னை மாறியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. ஜெயலலிதாவால் ஒழிக்கப்பட லாட்டரி மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு துணைபோவதாகச் சொல்லப்படுகிறது. இதனையெல்லாம் தடுக்கவேண்டிய முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அதனைச் செய்யத் தவறி வரும் நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மட்டும் செய்து வருகிறது. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து அவருக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளது'' என்றார்.