தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி முடிவின் போது நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது முகநூல் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களுக்கு பிரபல நடிகர்கள் போல் நடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் அந்த பிரபல நடிகர்கள் கேள்வி கேட்பது போல் அந்த வேடம் போட்டவர்கள் கமலிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது நடிகரும், இயக்குனருமான சேரன் அந்த டாஸ்கின் போது ரஜினி வேடம் போட்டிருந்தார். ரஜினி கமலை பார்த்து கேட்பது போல், வணக்கம் கமல் , நல்லா இருக்கீங்களா? எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வருஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.
இப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க... நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா ?' எனக் கேட்டார். அதற்கு 'அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்' என்று கமல் பதிலளித்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீன்களை போடவில்லை ஏன் என்று தெரியவில்லை என்று அதன் ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பதாக சொல்கின்றனர்.