
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்தார். இது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளானது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே முரண் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த சூழ்நிலையில், 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக, சபாநாயகர் அப்பாவுவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தலைமை செயலக வளாகத்தில்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவுடன் செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.