ஒடிசாவின் பிரச்ராஜ் நகர் என்ற பகுதியில் குறைதீர்ப்பு அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மருத்துவத்துறை அமைச்சர் நபாதாஸின் நெஞ்சு பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தது.
இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபாதாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வந்த இடைத்தேர்தலில் அமைச்சரின் மகள் தீபாளி தாஸ் ஜார்சுகுடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தனது தந்தையின் பிறந்த நாளான இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தங்காதர் திரிபதியை 48 ஆயிரத்து 721 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 198 என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், அப்பாவின் பிறந்த நாளின் பதவியேற்றுள்ளேன். தொகுதி மக்களின் நலன்களை கவனத்தில் கொள்வேன். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.