ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.
அந்த தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிட உள்ளதாக இ.பி.எஸ் அணி தெரிவித்திருந்ததது. அதே சமயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்களும் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ்-ம் தெரிவித்திருந்தார். மேலும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் எங்கள் அணிக்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என்று நேற்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணமாலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு முன்னர் பழனிசாமி தரப்பிலிருந்து அதிமுகவின் மூத்த தலைவர்களும் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் சென்னையிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து குஜராத் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் நடக்கும் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஓ.பி.எஸ் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்விழாவில் பாஜக தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கோருவார் என்றும் சொல்லப்படுகிறது.