முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை இன்று (24/02/2022) விமர்சியாக கொண்டாடினார்கள் அதிமுகவினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் அதிமுக தலைமையகத்துக்கு வந்தனர். ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். தொண்டர்கள் புடைசூழ பிறந்தநாளை கொண்டாடினர். இதனையடுத்து, அதிமுக தலைமையகத்துக்கு அருகே இருக்கும் கல்யாண மண்டபத்தில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறுசுவை உணவு விருந்தினை முன்னாள் எம்.எல்.ஏ. ஆலந்தூர் வெங்கட்ராமன் ஏற்பாடு செய்திருந்ததை ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியின் போது,"இனி வேறு ஏதேனும் ப்ரோக்ராம் இருக்காண்ணே? இதை முடித்ததும் எங்கே போறீங்க?" என்று எடப்பாடியிடம் பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். அதற்கு,"வீட்டுக்குத்தானே போறேன் " என்று சொன்ன எடப்பாடி, "நீங்க எங்கே போறீங்க அண்ணே?" என்று கேட்க, "எனக்கு எந்த வேலையும் இல்லே! நானும் வீட்டுக்குத்தான் போறேன் " என்று சொல்லியிருக்கிறார். இதனையடுத்து அங்கிருந்து இருவரும் புறப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில், எடப்பாடி, வேலுமணி, பெஞ்சமின் மூவரும் ஜெயக்குமாரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக புழல் சிறைக்கு வந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து அதிர்ந்து விட்டார் ஓபிஎஸ். உடனே தனது ஆதரவாளர் ஒருவரிடம், இது உண்மையா? புழல் சிறைக்கு எடப்பாடி சென்றுள்ளாரா? என விசாரிக்குமாறு ஓபிஎஸ் சொல்ல, அவரும் விசாரித்து விட்டு, உண்மைதான் என சொல்லியிருக்கிறார் அவர்.
இதனைக்கேட்டு மிகவும் கோபமான ஓபிஎஸ். " கொஞ்சம் கூட நம்பகத்தன்மையில்லாதவராக இருக்கிறாரே எடப்பாடி. என்னிடம் வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு இப்போ ஜெயக்குமாரை சந்திக்க சென்றிருக்கிறார். சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன் இல்லே. நான் வந்தால் எடப்பாடிக்கு என்ன இடைஞ்சல்? அவர் இழுத்த இழுப்புக்குத்தானே நான் போய்க்கொண்டிருக்கேன். அப்படியிருந்தும் எனக்கே துரோகம் செய்ற மாதிரி நடந்துக்கிட்டா எப்படி? இனியும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. இனி மேல் நான் யாருங்கிறதை எடப்பாடிக்கு காட்டுறேன். என் கிட்டே கூட உண்மையா இல்லேன்னா... தொண்டர்களுக்கு எப்படி உண்மையாக இருப்பார்? இதை இப்படியே விடக்கூடாது " என்று தனது ஆதரவாளரிடம் ஆவேசம் காட்டியிருக்கிறார் ஓபிஎஸ். விரைவில் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றுவார் என்கிறார்கள் அதிமுகவினர். இதற்கிடையே, ஜெயக்குமாரை தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்திக்க ஓபிஎஸ் ஆலோசித்திருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.