"நாகை நகராட்சியின் 36 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே போட்டியிட முடிவு செய்துள்ளோம்; பா.ஜ.க.வோ மற்ற கூட்டணி கட்சிகளோ இதுவரை ஒருவர்கூட சீட் கேட்டு வரவில்லை" என்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
நடக்குமா நடக்காதா என நீண்ட கால இழுபறியில் இருந்த உள்ளாட்சித் தேர்தல் தேதி அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அவசர அவசரமாக வேட்பாளர்களை தேர்வு செய்வது, கட்சிகாரர்களை திரட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என பரபரக்கிறது. அந்தவகையில் அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில் நாகை மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், சிட்டிங் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நேர்காணலுக்கு பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.எஸ். மணியன், "நாகை மாவட்டத்திலிருந்து இதுவரை பா.ஜ.க.வினர் சீட்டுக்கேட்டு வரவில்லை. நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டில் கூட போட்டியிடுவதற்கு பா.ஜ.க.வோ, மற்ற கூட்டணி கட்சிகளோ கேட்கவில்லை. சீட்டுக்கேட்டு அ.தி.மு.க.வை நாடவில்லை. ஆகவே 36 வார்டுகளிலும் அ.தி.மு.க.வே நேரடியாக களம் காண இருக்கிறது.
அ.தி.மு.க.வை விமர்சித்துப்பேசிய பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்தினர் பேசியது நாகரீகமான அரசியல்வாதி பேசக்கூடிய வார்த்தை இல்லை. வள்ளுவர் கூறுவார் நாவினால் சுட்டவடு ஆறாது என்று அதுபோல அவர் சுட்டுவிட்டார். அவர் அரசியல் துவங்கியது அ.தி.மு.க.வில்தான், பா.ஜ.க.விலேயே இருந்து பா.ஜ.க.விலேயே வளர்ந்தவர் பேசலாம், அ.தி.மு.க.வில் வளர்ந்து அங்குபோனவர் பேசுவதுதான் வருத்தம் அளிக்கிறது" என்று விமர்சித்தார்.