18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் சுமார் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் அஜய் ராஜ் 4 லட்சத்து 60 ஆயிரத்து 457 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை பிரதமர் மோடி 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். அதே சமயம் உத்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 80 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி சேர்ந்து 10 இடங்களைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூர் தொகுதியின் திரிணாமுல் வேட்பாளர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 5 முறை காங்கிரஸ் எம்பியாக இருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரியைத் தோற்கடித்துள்ளார். மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவரும் 25 ஆண்டுகளாக அத்தொகுதியில் எம்பியாக இருந்தவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரியை யூசுப் பதான் வீழ்த்தியுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 7 லட்சத்து 44 ஆயிரத்து 716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சோனல் ராமன் பாய் படேலை, அமித் ஷா 7 லட்சத்து 44 ஆயிரத்து 716 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி வெற்றி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரனாவத் 5 லட்சத்து 37 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதாவது காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை 74 ஆயிரத்து 755 வாக்குகள் வித்தியாசத்தில் கங்கனா ரனாவத் வீழ்த்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுப்ரியா சுலே வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் வெங்கட ரமனா கவுடாவை விட 2 லட்சத்து 84 ஆயிரத்து 620 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள்ளார். இமாச்சலப் பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் 1 லட்சத்து 82 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.