திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதி திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நிலக்கோட்டையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பழனிமாணிக்கம் சிறப்புரையாற்றினார். அதன்பின் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “பெரியார், அண்ணா, கலைஞர் என மூன்று பேரும் ஒருசேர திராவிட மாடல் ஆட்சியை தமிழக முதல்வர் வழங்கிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறையில் சத்தமில்லாமல் பல சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் மதிய உணவு கொண்டு வந்தார். கலைஞர் சத்துணவில் முட்டை கொண்டுவந்தார். அந்த வரிசையில் இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி எனும் புதியத் திட்டத்தை கொண்டுவந்து தமிழக முதல்வர் தன்னிகரில்லாத முதல்வராக திகழ்கிறார்.
ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் தமிழகம் முழுதும் கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுவரை 6 லட்சம் புதிய விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ரூ. 900 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி பெறுபவர்கள் பட்டியலிலும், விவசாய கடன் தள்ளுபடி பெற்றவர்கள் பட்டியலிலும் அதிமுகவினர் நடத்திய முறைகேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. தோண்டத் தோண்ட ஊழல்கள் வந்து கொண்டே இருந்தது. உதாரணத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நகையே இல்லாமல் நகை கடன் தள்ளுபடி லிஸ்ட் தயார் செய்யப்பட்டது. வட மாவட்டத்தில் ஒரே நபர் பெயரில் 650 நகைகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக மணலி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசுப்பள்ளி நிலத்தின் சர்வே நம்பரை கொடுத்து 85 ஆயிரம் விவசாய கடன் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசாங்கத்திடம் தள்ளுபடி பணத்தை பெற்று அதிமுகவினர் பங்கு போட நினைத்ததை தடுத்து நிறுத்தி உரிய ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்பட்டது” என்று கூறினார்.