Published on 02/05/2020 | Edited on 02/05/2020
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே அண்மையில் தாக்கல் செய்த மனு ஒன்றில், பிப்ரவரி 16- ஆம் தேதி வரை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். ரிசர்வ் வாங்கி இதற்கு அளித்த பதிலில் ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், #LoanWriteOff க்கும் #LoanWaiver க்கும் வித்தியாசம் தெரியாத ராகுல் காந்தி ஒரு ஞான சூனியம்... என்றும், யாராவது சொல்லி கொடுத்தால்கூட அப்பவும் புத்தி வராது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் விஜய் மல்லையா வழக்கில் அவரை இந்தியா கொண்டுவர ஆட்சேபனை இல்லை என்று இங்கிலாந்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது 8040 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் 1693 கோடி அளவிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.