திமுக அமைச்சரவையில் புதிய மந்திரிகள் வரிசையில் இடம்பிடித்துள்ளார் செஞ்சி மஸ்தான். செஞ்சி பஸ் நிலையத்தில் கே.எஸ்.எம். என்ற பெயரில் அந்தக் காலம் முதல் இப்போதுவரை சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் மஸ்தான். ஆரம்ப காலத்தில் தனது டீக்கடையில் காலை முதல் மாலை வரை வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து அந்த உழைப்பின் மூலம் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தவர்.
1976 காலகட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், தனது ஊரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும்போது செஞ்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மஸ்தான் கடையில் கட்சிக்காரர்களுடன் அமர்ந்து டீ குடிப்பார். அங்கே கட்சிக்காரர்களுடன் உள்ளூர் அரசியல் நிலவரம் முதல் வெளியூர் அரசியல் நிலவரம் வரை அனைத்தைப் பற்றியும் விவாதம் நடப்பது வழக்கம். அவற்றையெல்லாம் பார்த்து, கேட்டு அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட மஸ்தான், செஞ்சியாரின் தீவிர சீடராக வளர்ந்து திமுகவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
கடும் உழைப்பாளியான செஞ்சி மஸ்தான், அரசியலில் அவரது வளர்ச்சி திடீரென்று ஏற்பட்டது அல்ல. சிறு சிறு பதவிகள் பெற்று முன்னேறியவர் செஞ்சி, பேரூர் கழக செயலாளராக பதவி பெற்ற பிறகு, 1986 முதல் 2016 வரை ஐந்து முறை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்று பதவியில் இருந்துள்ளார். மாவட்ட செயற்குழு, மாநில பொதுக்குழு, ஒருங்கிணைந்த கடலூர் விழுப்புரம் மாவட்டங்களின் ஆவின் சேர்மனாகவும் பதவியில் இருந்தவர் மஸ்தான். விழுப்புரம் மாவட்டத்தை தெற்கு, வடக்கு, மத்தி என மூன்றாக பிரிக்கப்பட்டபோது இவர், கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி பெற்றார்.
அதன் பிறகு 2016இல் செஞ்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட தலைமை வாய்ப்பளித்தது. வெற்றிபெற்ற மஸ்தான், தற்போது நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அதே செஞ்சி தொகுதியில் நின்று வெற்றிபெற்று தற்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துரை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மஸ்தான், அரசியல் அனுபவ படிப்பில் இவருக்கு மாஸ்டர் டிகிரி கொடுக்கலாம் அந்த அளவிற்கு தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்தவர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களையும் பெயர் சொல்லி அழைத்துப் பேசும் அளவிற்கு தொகுதி மக்களிடம் மிக நெருக்கமான அறிமுகம் உள்ளவர். இவர், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரிடமும் இணக்கமாக இருப்பவர்.
எந்தப் பதவியில் இருந்தாலும் கௌரவம் பார்க்காதவர். அதற்கு உதாரணம் தற்போதுவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது தமது டீக்கடைக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுப்பார். அதேபோல் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஊருக்கு வந்த செஞ்சி மஸ்தான், நான் அமைச்சர் என்பதை எல்லாம் யாரும் பெரிதாக எண்ண வேண்டாம். எப்போதும் போல உங்களில் ஒருவனாக இருப்பேன் என்று கட்சியினரிடம் பொது மக்களிடமும் கூறியுள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு சென்று கரோனா பரவல் நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் முதல் கல்வி அதிகாரிகள்வரை பலரை சந்தித்ததோடு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார நிலையங்கள் இப்படி பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில் தனது டீக்கடைக்குச் சென்று, டீ போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தும் அசத்தினார்.
1955இல் பிறந்தவர் மஸ்தான், இவருக்கு தற்போது 66 வயது நடைபெறுகிறது. ஆனால் இப்போதும் இளைஞர்களைப் போல சுறுசுறுப்பாக மக்கள் பணி செய்து வருகிறார். இவருக்கு சைத்தானிபி என்ற மனைவியும் மை முன்னிசா, ஜெய் முன்னிசா, தைமுன்சா என மூன்று மகள்களும் மொக்த்தியார் மஸ்தான் என்ற ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் காலம் முதல் மிகவும் துணிச்சலோடு அரசியல் செய்தவர் மஸ்தான். இவரது உழைப்பு, கட்சிப்பணி, மக்கள் பணி இவற்றை நன்றாக எடைபோட்டு செஞ்சி மஸ்தானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் பதவி அளித்துள்ளார் என்கிறார்கள் திமுகவின் உடன் பிறப்புகள். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக என்றால் சி.வி. சண்முகம் மட்டுமே அமைச்சர். திமுக என்றால், பொன்முடி மட்டுமே அமைச்சர்.
இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து திமுகவின் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ள மஸ்தானுக்கு அமைச்சர் பதவி அளித்து, மாவட்ட மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மஸ்தானுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது விழுப்புரம் மாவட்டக் கட்சியினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள செஞ்சி மஸ்தான், அமைச்சர் பதவியின் மூலம் மக்கள் பணியில் மேலும் சிறந்து விளங்குவார் என நம்பிக்கையோடு வாழ்த்துகிறார்கள் விழுப்புரம் மாவட்ட மக்கள்.