நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொலை வழக்கை விசாரித்த போலீசார், கொலை செய்தவர் வீட்டில் வந்து உமா மகேஸ்வரியிடம் பேசிவிட்டுதான் கொலை செய்துள்ளார் என சந்தேகப்படுகின்றனர்.
உமா மகேஸ்வரியுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சீனியம்மாள் என்கிற திமுக பிரமுகரின் பெயர் சிக்கியது. சீனியம்மாள் தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட ரூபாய் 50 லட்சம் உமா மகேஸ்வரியிடம் கொடுத்திருந்தார். அதை உமா மகேஸ்வரி திமுக தலைமைக்கு நெருக்கமான ஒருவரிடம் கொடுத்தார். அவர் சீனியம்மாளுக்கு சீட்டும் வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பியும் தரவில்லை. இது சீனியம்மாளுக்கும், உமாமகேஸ்வரிக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோபத்தில் சீனியம்மாள் கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இப்படி திமுக பிரமுகர் கொலைக்கு திமுகவினர்தான் காரணம் என போலீஸ் சொல்வது பொய். இது உமா மகேஸ்வரி கொலையுடன் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அரசின் போலீஸ் புதுக்கதை தயாரித்திருக்கிறது என்கிறார்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீனியம்மாள். எனக்கு உடல்நலம் சரி இல்லாத காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றேன்.
கொலையான உமா மகேஸ்வரி உண்மையிலேயே நல்லவர். உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டது நான் டி.வி செய்தியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். கட்சி பதவிக்காகவோ அல்லது தேர்தலில் சீட் வாங்கி தரவேண்டும் என்றோ நான் அவரிடம் பணம் கொடுத்து ஏமாறவில்லை.
காவல்துறை சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரித்தால் அவர்கள் அனைவரும் குற்றவாளி கிடையாது. என் மீது குற்றம்சாட்டி தி.மு.கவிற்கு அவபெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர். காவல்துறை உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றார்.