சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (20.06.2024) தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூலில் தான் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான இன்று (22.06.2024) பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதற்குச் சபாநாயகர் அப்பாவு, “கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்சனையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு பேரவையில், “புறக்கணிப்பில் அதிமுக ஏன் உறுதியாக உள்ளது எனத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் புறக்கணிக்கிறார்கள் என்றால் சட்டப்பேரவையையும் புறக்கணிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.