திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய மதிமுக சார்பில், மத்திய அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வத்தலக்குண்டு மதிமுக ஒன்றியச் செயலாளர் மருது ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் செல்வராகவன், நகரச் செயலாளர் வால்டர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொஹையா சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, “தமிழகத்தில் நாள்தோறும் பேசு பொருளாக வேண்டும் என்பதற்காக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தான் பேசுவது உண்மைக்குப் புறம்பானது என்பதை அறிந்தும் அந்தக் கருத்தைச் சொல்வது மூலம் தமிழகத்தில் தான் ஒரு விவாதப்பொருளாக வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. எனவேதான் அவரை தற்போது தமிழக மக்கள் அவதூறு அண்ணாமலை என அழைக்கத் தொடங்கியுள்ளனர்” என்று கூறினார். இக்கூட்டத்தில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.